சைனஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு


ஓமம் : இது வாசனை மிக்கது. வாயுத் தொல்லையை அறவே நீக்கும் தன்மை உள்ளது. ஓம ரசம், ஓமம் கலந்த மோர் என்று உண்ணலாம். அதே சமயம், இதை வறுத்து, மூட்டை கட்டி மூக்கில் நுகர்ந்தால், சைனஸ் தொல்லை நீங்கும். நெற்றியில் சூடாக வைத்தால் ஒற்றைத் தலைவி ஓடிப் போய்விடும்.

தொண்டை, காது வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாம். ஓமவாட்டர் என்னும் ஓமத் தண்ணீர், குழந்தைகளுக்கு உபயோகிக்காத இந்திய வீடுகளே இல்லை. வெல்லம் + ஓமம் சேர்த்து மென்று தின்றால், வயிற்றுப் பூச்சி போய்விடும். அரிசி கழுவும் தண்ணீரில், ஓமத்தை ஊற வைத்து, சூடு செய்து குடித்தால் புளிச்ச ஏப்பம் நீங்கும். இப்படி மருத்துவ குணங்கள் மிக்க பலவற்றை உபயோகித்து பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

மருத்துவர்களிடம் செல்ல வேண்டியது அவசியம் தான். ஆனால் இரண்டு தும்மல் போட்டாலே, டாக்டரிடம் ஓடும் நாம், சித்தர்களும், முன்னோர்களும் உபயோகித்த உணவுகளிலிருந்து, சிலவற்றை நாம் உபயோகித்துப் பார்க்கலாமே. இப்படி சரியாகவில்லை என்றால் மருத்துவர்களிடம் அவசியம் போய்தான் ஆக வேண்டும்.

கடந்த சில நாட்களாக, சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தில் உபயோகப்படும், நமது வீட்டில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருள்களைப் பற்றியும், அவைகளால் குணமாகும் நோய்கள், நோய்தடுப்புகள் பற்றியும் பார்த்தோம். இவற்றை உபயோகித்து குணமடைய வாழ்த்துகிறோம்.